Friday, March 15, 2019

சுப்ரமணிய பாரதியார்


சுப்ரமணிய பாரதியார் ஒரு தமிழ் கவிஞர். இந்திய சுதந்திர போராட்ட காலத்தில் கனல் தெறிக்கும் விடுதலைப்போர் கவிதைகள் வாயிலாக மக்களின் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். இவர் ஒரு கவிஞர் மட்டுமல்லாமல் ஒரு  எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், சமூக சீர்திருத்தவாதி மற்றும் தன்னுடைய பாட்டுகளின் மூலமாக சிந்தனைகளை மக்களிடம் தட்டியெழுப்பியவர். தம் தாய்மொழியாம் தமிழ்மொழி மீது அளவுகடந்த பற்றுக்கொண்ட இவர், “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம்” என்று போற்றி பாடியுள்ளார். விடுதலைப் போராட்ட காலத்தில், இவருடைய தேசிய உணர்வுள்ள பல்வேறு கவிதைகள் மக்களை ஒருங்கிணைத்த காரணத்தினால் “தேசிய கவியாக” போற்றப்பட்ட மாபெரும் புரட்சி வீரனின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை விரிவாகக் காண்போம்.
பிறப்பு: டிசம்பர் 11, 1882
பிறப்பிடம்: எட்டயபுரம், தமிழ்நாடு (இந்தியா)
பணி: கவிஞர், எழுத்தாளர், விடுதலை வீரர்
இறப்பு: செப்டம்பர் 11, 1921
நாட்டுரிமை: இந்தியா
பிறப்பு
சுப்ரமணிய பாரதியார் அவர்கள்,  சின்னசாமி ஐயருக்கும், இலட்சுமி அம்மாளுக்கும் மகனாக 1882 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள எட்டயபுரத்தில் பிறந்தார்.  அவருக்கு பெற்றோர் இட்ட பெயர் சுப்பிரமணியன். அவருடைய 5 வயதில் அவருடைய தாயார் காலமானார். இவர் இளம் வயதிலேயே தமிழில் புலமைப்பெற்றுத் திகழ்ந்தார்.
இளமைப் பருவம்
சிறு வயதிலேயே பாரதியாருக்கு தமிழ் மொழி மீது சிறந்த பற்றும், புலமையும் இருந்தது. ஏழு வயதில் பள்ளியில் படித்துவரும்பொழுது கவிதைகள் எழுதத் தொடங்கினார். தன்னுடைய பதினொரு வயதில் கவிபாடும் ஆற்றலை வெளிப்படுத்தினார், இவருடைய கவிப்புலமையை பாராட்டிய எட்டயபுர மன்னர், இவருக்கு “பாரதி” என்ற பட்டத்தை வழங்கினார். அன்று முதல் இவர் “சுப்பிரமணிய பாரதியார்” என அழைக்கப்பெற்றார்.    .
பாரதியாரின் திருமண வாழ்க்கை
பாரதியார் அவர்கள், பள்ளியில் படித்துகொண்டிருக்கும் பொழுதே 1897 ஆம் ஆண்டு செல்லம்மா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். தனது தந்தையின் இறப்புக்குப் பிறகு பாரதியார் வறுமை நிலையினை அடைந்தார். சிறிது காலம் காசிக்கு சென்று தங்கியிருந்தார். பிறகு எட்டையபுர மன்னரின் அழைப்பை ஏற்று அரசவை கவிஞராக பணியாற்றினார்.
பாரதியாரின் இலக்கிய பணி
‘மீசை கவிஞன்’ என்றும் ‘முண்டாசு கவிஞன்’ என்றும் தமிழ் இலக்கிய உலகம் போற்றும் பாரதியார்,  தாய் மொழியாம் தமிழ் மொழியின் மீது மிகுந்த பற்றுடையவராக திகழ்ந்தார். இவர் சமஸ்கிருதம், வங்காளம், இந்தி, ஆங்கிலம் போன்ற பிறமொழிகளிலும் தனி புலமைப்பெற்று விளங்கினார். 1912 ஆம் ஆண்டு கீதையை தமிழில் மொழிப்பெயர்த்தார். ‘கண்ணன்பாட்டு’, ‘குயில்பாட்டு’, ‘பாஞ்சாலி சபதம்’,’ புதிய ஆத்திச்சூடி’ போன்ற புகழ் பெற்ற காவியங்கள் பாரதியரால் எழுதப் பெற்றன.
விடுதலைப் போராட்டத்தில் பாரதியின் பங்கு
சுதந்திரப் போரில், பாரதியின் பாடல்கள் உணர்ச்சி வெள்ளமாய், காட்டுத்தீயாய், சுதந்திரக் கனலாய் தமிழ்நாட்டை வீருகொள்ளச் செய்தது. பாரதியார் “இந்திய பத்திரிக்கையின்” மூலம் மக்களிடையே விடுதலை உணர்வை தூண்டும் வகையில் பல எழுச்சியூட்டும் கட்டுரைகளை எழுதினார். பாரதியின் எழுச்சிக்கு, தமிழ்நாட்டில் பலத்த ஆதரவு பெருகுவதைக் கண்ட பிரிட்டிஷ் ஆட்சி “இந்தியா பத்திரிக்கைக்கு” தடை விதித்து அவரை கைது செய்து சிறையிலும் அடைத்தது. அதுமட்டுமல்லாமல், விடுதலைப் போராட்டக் காலத்தில் தேசிய உணர்வுள்ள பல்வேறு கவிதைகளைப் படைத்து மக்களை ஒருங்கிணைத்த காரணத்தால், பாரதி “தேசிய கவியாக” அனைவராலும் போற்றப்பட்டார். இவர் சுதேசிமித்திரனில் உதவி ஆசிரியராக, நவம்பர் 1904 முதல் ஆகஸ்ட் 1906 வரை பணியாற்றினார். “ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம்” என்று சுதந்திரம் அடைவதற்கு முன்பே தன்னுடைய சுதந்திர தாகத்தை தன் பாட்டின் மூலம் வெளிபடுத்தியவர், மகாகவி சுப்பிரமணிய பாரதியார்.
இறப்பு
 1921 ஆம் ஆண்டு ஜூலை மாதம் திருவல்லிகேணியில் உள்ள பார்த்தசாரதி கோவிலுக்கு சென்றபோது, எதிர்பாராவிதமாக அந்த கோவில் யானையால் தூக்கி எறியப்பட்டதால் பலத்த காயமுற்று மிகவும் நோய்வாய்ப்பட்டார். பிறகு, 1921 செப்டம்பர் 11ம் தேதி, தனது 39 ஆவது வயதில் இவ்வுலக வாழ்விலிருந்து விடுதலைப் பெற்றார்.
பாரதியாரை நினைவூட்டும் சின்னங்கள்
எட்டயபுரத்திலும், சென்னையில் உள்ள திருவல்லிக்கேணியிலும் பாரதியார் வாழ்ந்த இடத்தை பாரதியாரின் நினைவு இல்லமாக தமிழ்நாடு அரசு மாற்றி இன்று வரை பொதுமக்களின் பார்வைக்காக பராமரித்து வருகிறது. இவர் பிறந்த எட்டயபுரத்தில், பாரதியின் நினைவாக மணிமண்டபமும் அமைக்கப்பட்டு இவருடைய திருவுருவச் சிலையும் வைக்கப்பட்டுள்ளது. பாரதியின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படக் கண்காட்சியும், இவருடைய திருவுருவச் சிலையும், இவரின் நினைவை போற்றும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
பாரதியை மக்கள், ‘கவி’, ‘மானுடம் பாடவந்த மாகவி’, ‘புது நெறி காட்டிய புலவன்’, எ’ண்ணத்தாலும் எழுத்தாலும் இந்திய சிந்தனைக்கு வளம் சேர்த்தவர்’, ‘பல்துறை அறிஞர்’, ‘புதிய தமிழகத்தை உருவாக்க கனவு கண்ட கவிக்குயில்’, ‘தமிழின் கவிதை’ மற்றும் உரைநடையில் தன்னிகரற்ற புலமை பெற்ற பேரறிவாளர்,  என்றெல்லாம் புகழ்கின்றனர். உலகதமிழர் நாவில் மக்கள்கவி பாரதியாரின் பெயர் அடிக்கடி உச்சரிக்கபடுகிறது என்றால் அது மிகையாகாது.

ஜெயகாந்தன்

ஜெயகாந்தன் அவர்கள், மிகுந்த ஆற்றலும், ஆளுமையும், வேகமும், உயர்வும், தனித்துவமும் கொண்ட தலைச்சிறந்த எழுத்தாளர்களுள் ஒருவராவார். அவர் ஓரளவே படித்திருந்தாலும், தமிழ் இலக்கியத்தைக் கரைத்துக் குடித்து, தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களைத் தன் எழுத்துக்களால் கொள்ளைக் கொண்டவர். ஒரு எழுத்தாளராக மட்டுமல்லாமல், கட்டுரையாளர், பத்திரிகையாளர், துண்டு வெளியீடுகளை எழுதுபவர், திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் விமர்சகர் எனப் பல்வேறு முகங்கள் கொண்டு, தமிழ் இலக்கியத்திற்கு அருட்தொண்டாற்றியவர் ஜெயகாந்தன் என்று சொன்னால் அது மிகையாகாது. இலக்கியத்திற்காக இந்திய அரசு வழங்கும் மிக உயர்ந்த விருதான ‘ஞான பீட விருதைப்’ பெற்ற இரண்டாவது தமிழ் எழுத்தாளர் என்ற பெருமைக்குரியவர். மேலும், இந்திய அரசின் மிக உயரிய விருதான ‘பத்ம பூஷன் விருதை’ தமிழ் இலக்கியத்திற்காக முதல்முறைப் பெற்றார். ‘சாஹித்ய அகாடமி விருது’, ‘ரஷ்ய விருது’ என்று பல்வேறு விருதுகளுக்குத் தகுதியான ஜெயகாந்தன் அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் தமிழ் இலக்கியத்திற்கு அவர் ஆற்றிய சாதனைகள் பற்றியறிய மேலும் தொடர்ந்து படிக்கவும்.
பிறப்பு: ஏப்ரல் 24, 1934
பிறப்பிடம், கடலூர், தமிழ்நாடு, இந்தியா
பணி: எழுத்தாளர்பத்திரிகையாளர்திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் விமர்சகர்
நாட்டுரிமை: இந்தியன்

பிறப்பு
ஜெயகாந்தன் அவர்கள், தென்னிந்தியாவில் உள்ள தமிழ்நாட்டில் இருக்கும் கடலூரில் ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதி, 1934 ஆம் ஆண்டில் ஒரு வேளாண் குடும்பத்தில் பிறந்தார்.
ஆரம்ப வாழ்க்கையும், கல்வியும்

ஜெயகாந்தன் அவர்களுக்கு, சிறு வயதிலிருந்தே பள்ளிப்படிப்பில் நாட்டமில்லாமல் இருந்தது. எனவே, அவர் ஐந்தாம் வகுப்பு வரையே பள்ளிக்குச் சென்றார். இதன் காரணமாக, அவருக்கும், அவரது தந்தைக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், அவர் தனது தாயார் மற்றும் தாத்தாவிடம் மிகவும் நெருக்கமாக இருந்தார். வீட்டில் அவருக்கும், அவரது தந்தைக்கும் சுமூகமானப் பேச்சுவார்த்தை இல்லாமல், இருவரும் எதிரும், புதிருமாக இருந்தனர். அவர் பள்ளிச் செல்லவில்லை என்ற ஒரே காரணத்தால், அவரது தந்தை அவருக்குக் கடுமையான தண்டனைகள் வழங்கினார். சிறுவனாக இருந்து இதனை சற்றும் தாங்கிக் கொள்ள இயலாததால், அவர் தனது 12 வது வயதில் வீட்டை விட்டு ஓடி, விழுப்புரத்தில் உள்ள அவரது மாமாவின் வீட்டிற்கு வந்து சேர்ந்தார். அங்கு, அவரது மாமா அவருக்கு கம்யூனிச கொள்கைகளையும், சுப்ரமணிய பாரதி படைப்புகளையும் அறிமுகப்படுத்தி வைத்தார்.
இலக்கியம் மீது ஆர்வம் 
சிறிது காலம் கழித்து, ஜெயகாந்தன் அவர்களுடைய தாயார் அவரை சென்னையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினரான அவரது உறவினர் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் தனது பிள்ளைப் பருவத்தைக் கழித்த அவர், தமிழ்நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களுக்குப் பரிச்சயமானார். அக்கட்சி அலுவலகத்தைத் தனது வீடாகவும், அக்கட்சி உறுப்பினர்களைத் தனது குடும்ப அங்கத்தினர்களாகவும் கருதிய அவர், அவர்களின் கலந்துரையாடல்களைக் கேட்க கேட்க, இலக்கியத்தின் மீது அவருக்கு நாட்டம் ஏற்பட்டது. இதனால், கட்சியின் அங்கத்தினரான ஜீவானந்தம் என்பவர், அவருக்குத் தமிழாசிரியர் ஒருவரை அவருக்குக் கல்வி கற்றுத் தருமாறு பணியில் அமர்த்தினார். தமிழ் இலக்கிய, இலக்கணங்களை முறையாகக் கற்றுத் தேர்ந்த அவர், பல இடங்களில் முழுநேரம் மற்றும் பகுதிநேர வேலைகளில் வேலைப் பார்த்தார். 1949ல், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்குத் தடைவிதிக்கப்பட்டதால், அக்கட்சிக்குத் தடை உத்தரவு விதிக்கப்பட்டது. இதன் பொருட்டாக, அவர் தஞ்சாவூரிலுள்ள ஒரு காலணிகள் விற்கும் கடையில் தற்காலிகமாகப் பணியில் சேர்ந்தார். அவருக்குக் கிடைத்த ஓய்வு நேரங்களில், எழுதும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார். மேலும், புதிய கட்சிகளின் வருகையால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முழுவதுமாக அழிந்ததால், காமராஜரின் கொள்கைகள் மீது அவருக்குப் பற்று ஏற்பட்டதால், அவரது தொண்டனாக மாறி, அவர் இருந்த தமிழகக் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்.
எழுத்துலக வாழ்க்கை
ஜெயகாந்தன் அவர்கள், அவரது இலக்கிய வாழ்க்கையை 1950களில் தொடங்கினார். பல்வேறு தினசரி மற்றும் மாத நாளிதழ்களான சரஸ்வதி, தாமரை, கிராம ஊழியன், ஆனந்த விகடன் போன்றவற்றில் அவரது படைப்புகள் வெளியாயின. அவரது படைப்புகளனைத்தும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றதால், அவருக்குப் புகழும், அவரது படைப்புகளுக்கு அங்கீகாரமும் கிடைத்தது. இதனால், அவர் தலைச்சிறந்த தமிழ் எழுத்தாளர்களில் ஒருவராகப் போற்றப்பட்டார். எழுத்துலகில் கொடிக்கட்டிப் பறந்த அவர், தமிழ்த் திரையுலகிலும் வலம் வந்தார். அவரது மிகவும் வெற்றிப்பெற்ற படைப்புகளான “உன்னைப் போல் ஒருவன்” மற்றும் “சில நேரங்களில் சில மனிதர்கள்” போன்ற நாவல்கள் படமாக்கப்பட்டன. “உன்னைப் போல் ஒருவன்” என்ற படம், சிறந்த மாநில மொழித் திரைப்படத்திற்கான ‘குடியரசுத் தலைவர் விருதில் மூன்றாம் விருதான பத்ம பூஷன் விருதை’ பெற்றது.
அவரது படைப்புகள்
ஜெயகாந்தன் அவர்கள், பல்வேறு வாழ்க்கை வரலாறு, நாவல்கள், குறுநாவல்கள், சிறுகதைகள் தொகுப்பு, கட்டுரைகள், போன்றவற்றைப் படைத்துள்ளார். அதில் சில குறிப்பிடத்தக்கப் படைப்புகள்:
‘வாழ்விக்க வந்த காந்தி 1973’, ‘ஒரு கதாசிரியனின் கதை’, ‘பிரம்ம உபதேசம்’, ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’, ‘ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்’, ‘சினிமாவுக்குப் போன சித்தாளு’, ‘கண்ணன்’, ‘உன்னைப் போல் ஒருவன்’, ‘ரிஷிமூலம்’, ‘கருணையினால் அல்ல’, ‘கங்கை எங்கே போகிறாள்’, ‘ஒவ்வொரு கூரைக்கும் கீழே…’, ‘சுந்தர காண்டம்’ மற்றும் பல.
தமிழ்த் திரையுலகில் இவருடைய கதைகள் பல திரைப்படங்களாகத் தயாரிக்கப்பட்டன. அவை: ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’, ‘ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்’, ‘ஊருக்கு நூறு பேர்’, ‘உன்னைப் போல் ஒருவன்’, ‘யாருக்காக அழுதான்’, மற்றும் ‘புதுச் செருப்பு’.
அவர் இயக்கிய திரைப்படங்கள்: ‘உன்னைப் போல் ஒருவன்’, ‘யாருக்காக அழுதான்’, மற்றும் ‘புதுச்செருப்பு கடிக்கும்’
விருதுகள்
  • 1972 – சாஹித்ய அகாடமி விருது
  • 2002 – இலக்கியத்திற்காக இந்திய அரசு வழங்கும் மிக உயர்ந்த விருதான ‘ஞான பீட விருதைப்’ பெற்ற இரண்டாவது தமிழ் எழுத்தாளர்.
  • 2009 – இந்திய அரசின் மிக உயரிய விருதான ‘பத்ம பூஷன் விருதை’, இலக்கியத்துறைக்காக முதல்முறை வென்றார்.
  • 2011 – ரஷ்ய விருது
காலவரிசை
1934: தமிழ்நாட்டில் இருக்கும் கடலூரில் ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதி, 1934 ஆம் ஆண்டில் ஒரு வேளாண் குடும்பத்தில் பிறந்தார்.
1950: அவரது இலக்கிய வாழ்க்கையை 1950களில் தொடங்கினார்.
2002: இலக்கியத்திற்காக இந்திய அரசு வழங்கும் மிக உயர்ந்த விருதான ‘ஞான பீட விருதைப்’ பெற்ற இரண்டாவது தமிழ் எழுத்தாளர்.
2009: இந்திய அரசின் மிக உயரிய விருதான ‘பத்ம பூஷன் விருதை’, இலக்கியத்துறைக்காக முதல்முறை வென்றார்.

கம்பர்


“கம்பன் வீட்டுத் கட்டுத்தறியும் கவிபாடும்” என்றொரு பழமொழியே உருவாகும் அளவிற்கு, கம்பரது புகழும், கவித்திறமையும் அனைவராலும் இன்றளவும் பேசப்பட்டு வருகிறது. ‘கவிபேரரசர் கம்பர்’, ‘கவிச்சக்ரவர்த்தி கம்பர்’, ‘கல்வியில் பெரியவர் கம்பர்’ என்றெல்லாம் அவரது கவித்திறனைப் பறைசாற்றும் அளவிற்கு அவருக்குப் பட்டங்கள் வழங்கப்பட்டன. சமஸ்கிருதம் மற்றும் தமிழ் மொழியில் சொல்வன்மைக் கொண்டவராக இருந்த அவர், ஆழமான கவிதை அனுபவமும், கற்பனை ஆற்றலும், புலமைத் திறனும் பெற்று, அவரது சமகாலத்துப் புலவர்களான ஓட்டக்கூத்தர், சேக்கிழார் போன்றோரின் நன்மதிப்பையும் பெற்றிருந்தார். ‘கம்பராமாயணம்’, ‘சிலையெழுபது’, ‘சடகோபர் அந்தாதி’, ‘சரசுவதி அந்தாதி’, ‘திருக்கை வழக்கம்’, ‘ஏரெழுபது’ மற்றும் ‘மும்மணிக்கோவை’ போன்றவை அவர் படைத்த படைப்புகளாகும். இதில், ‘கம்பராமாயணம்’, தமிழ் இலக்கியத்தில் தலைச்சிறந்த காவியமாகக் கருதப்படுகிறது. மேலும், கம்பரின் தனித்துவமான சுவைக்கினிய பாணியில் அதைப் படைத்ததால், அது உலகளாவிய அங்கீகாரம் பெற்றது எனலாம். ஒரு சிறந்த தமிழ் எழுத்தாளர், அறிஞர், கவிஞர், நாடக ஆசிரியர், என்று பன்முகம் கொண்டு விளங்கிய கம்பர் அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் தமிழ் இலக்கியத்திற்கு அவர் ஆற்றிய சாதனைகள் பற்றியறிய மேலும் தொடர்ந்து படிக்கவும்.
பிறப்பு: கிபி 1180
பிறப்பிடம்: திருவழுந்தூர், தஞ்சை மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா
இறப்பு: கிபி 1250
பணி: தமிழ்க் கவிஞர்
நாட்டுரிமை: இந்தியன்
பிறப்பு
கம்பர் அவர்கள், கிபி 12 ஆம் நூற்றாண்டில், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம், தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருவழுந்தூர் என்னும் இடத்தில் ஆதித்தன் என்பவருக்கு மகனாக ஒச்சன் என்ற உட்பிரிவில் பிறந்தார். அவரது பெற்றோர்கள், கடவுள் நரசிம்மரின் தீவிர பக்தர்கள் என்பதால், அவருக்கு ‘கம்பர்’ என்று பெயர் சூட்டினர். ‘கம்பா’ என்றால் ‘தூண் என்று பொருள். ‘பக்தப் ப்ரகலாதனைக் காக்க, நரசிம்மர், தூணைப் பிளந்து கொண்டு வந்தார்’ என்ற பக்திக் கூற்றைக் கொண்டு, அவருக்கு அப்பெயர் சூட்டினர் அவரது பெற்றோர்.
ஆரம்ப வாழ்க்கையும், கல்வியும்
நாதஸ்வர வித்வான்களான ஒச்சன் பரம்பரையில் பிறந்திருந்தாலும், அவர் தமிழ்நாட்டில் உள்ள வெண்ணைநெல்லூர் என்னும் ஊரில் உள்ள ஒரு பணக்கார விவசாயி ஒருவரால் செல்வ, செழிப்போடு எடுத்து வளர்க்கப்பட்டார். இளம் வயதிலிருந்தே அவர், தொன்மையான மொழிகளான சமஸ்கிருதம் மற்றும் தமிழ் மொழியின் மீது பேரார்வம் உடையவராக இருந்ததால், அவரது நலம் விரும்பியான வள்ளல் சடையப்ப முதலியார் என்பவரின் உதவியுடன் அவ்விருமொழிகளை மிகுந்த ஆர்வத்துடன் கற்றுத் தேர்ந்தார். சிறு வயதிலிருந்தே அவருக்குக் கவிதைகள் எழுதும் ஆர்வம் இருந்தது. அம்மொழிகளின் அடிப்படையை பாரம்பரிய முறையில் நன்கு கற்ற அவர், பல கவிதைகளும், நூல்களும் எழுதத் தொடங்கினார். அதன் பின்னர், அவரது கவிப்புலமை எட்டுத்திக்கும் பரவத் தொடங்கியது.
கம்பரின் கவிப்புலமை
மாபெரும் கவிஞராக உருவெடுத்த கம்பரின் புகழை அறிந்த அப்போதைய சோழ மன்னர், அவருக்கு அழைப்பு விடுத்தார். அரண்மனைக்கு சென்ற அவர், மன்னரின் அன்பு கட்டளைக்கிணங்க அவரது படைப்புகளில் சில வரிகளை அவருக்குப் பாடிக் காட்டினார். அவரது கவித்திறனை நேரில் கண்டு வியந்த சோழ மன்னர், அவருக்கு, ‘கவிஞர்களின் பேரரசர்’ என்றும் அர்தமுடைய ‘கவி சக்கரவர்த்தி’ என்றும் பட்டம் சூட்டி, அவருக்கு சொந்தமான பெருவாரிய நிலத்தைப் பரிசளித்து, அதற்கு ‘கம்பநாடு’ என்றும் பெயர் சூட்டினார்.
இலக்கிய வாழ்க்கை
கம்பரின் தாய்மொழி, தமிழ் என்றாலும், சமஸ்கிருதத்திலும் அவர் புலமைப் பெற்றே விளங்கினார். அதற்கு சான்று, அவர் எழுதிய ‘கம்பராமாயனம்’. முனிவர் வால்மீகி சமஸ்கிருதத்தில் படைத்த ராமாயணத்தை, அவர் தமிழில், அவருக்குரித்தான பாணியில் மீண்டும் எழுதினார். அவரது பாடல் வரிகளின் அழகு, அற்புதமான நயம், உவமானம் மற்றும் பல வகையான வியக்கத்தகு கவிதை நடைகள் அவரது பாரம்பரிய கவிதைகளில் இடம் பெற்றிருக்கும். தமிழ்மொழியின் பெருமையை, இடைக்கால காலகட்டங்களில் அற்புதமாக வெளிக்காட்டியதால், அவர் ‘கம்ப நாட்டாழ்வார்’ என்றும் அழைக்கப்பட்டார். அவர், கம்பராமாயணம் தவிர, ‘சிலையெழுபது’, ‘சடகோபர் அந்தாதி’, ‘சரசுவதி அந்தாதி’, ‘திருக்கை வழக்கம்’, ‘ஏரெழுபது’ மற்றும் ‘மும்மணிக்கோவை’ போன்ற அற்புதப் படைப்புகளைப் படைத்துள்ளார்.
கம்பராமாயணம்
கம்பராமாயணம், தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு தனிப்பட்ட இடத்தைப் பிடித்து, தமிழ் இலக்கியத்தையே வானளவிற்கு உயர்த்தியது என்று சொன்னால் அது மிகையாகாது. கவிதை வடிவங்களில் ஆளுமைப் பெற்றவராக இருந்த அவர், வார்த்தைகளில் பலவிதமான அற்புதங்களை நிகழ்த்துபவர் என்பது அக்காவியத்தில் பல இடங்களில் தெளிவாகத் தெரியும். உருவகமும், உவமானமும் நிறைந்த கம்பராமாயணம், பின்னாளில் வரும் கவிஞர்களுக்கு ஒரு குறிப்புதவி நூலாக அமைந்தது. வால்மீகி எழுதிய ராமாயணத்தில் 24, 000 ஈரடிகள் இருக்கும், ஆனால், கம்பராமாயணத்தில் 11, ௦௦௦ சந்தங்கள் இருக்கும். தமிழர்களின் கலாச்சார உணர்திறனுக்கேற்ப அவர், வால்மீகியின் ராமாயணத்தில் பல இடங்களை மாற்றி அமைத்துள்ளார். அவற்றுள் சில:
சீதையைக் கண்ட ஆஞ்சநேயர், அதை ராமனிடம் தெரிவிக்கும் போது, “கண்டனன் கற்பினுக் கணியை கண்களால் ….” என்ற அற்புத வார்த்தைகள் இன்றளவும் தமிழ் இலக்கியத்தில் மறக்கமுடியாத அடிகளாக இருந்து வருகிறது.
இராவணன், சீதையைக் கடத்திக் கொண்டு போகும் போது, “அவள் கற்பிற்கே இலக்கணமாக இருந்தாள் என்பதற்காக, அவள் இருந்த குடிசையோடு சிறிதளவு நிலத்துடன் பெயர்த்தெடுத்து அவளைக் கடத்திக்கொண்டு போனான்” என்றும் அற்புதமாக விளக்கியிருப்பார்.
போரில், ராமன் தொடுத்த ஒரு அம்பு, அவனது உடல் முழுவதும் துளைகளை ஏற்படுத்தியது. இதைக் கம்பர், “ராவணன் சீதை மீது கொண்ட அழிவுநோக்கிய காதல், அவனது உடலில் எங்குள்ளது என்பதை அறியும் சல்லடையாக இருந்தது அந்த அம்பு” என்று யாராலும் யூகிக்க முடியாத அளவிற்கு அற்புதமாக விளக்கியிருப்பார்.
இறப்பு
கவிச்சக்ரவர்த்தி கம்பர், கிபி 1250 ஆம் ஆண்டில் இயற்கை எய்தினார்.
இதுவரை வந்த தமிழறிஞர்கள் பட்டியலில், கம்பர் யாரும் எட்ட முடியாத இலக்கில் உள்ளார் என்று தான் சொல்லவேண்டும். ஆனால், இன்றளவும் தமிழ் அறிஞர்கள் மத்தியில், கம்பனின் கவிதைத் தொகுப்புகள் இணையற்றதாகவே உள்ளது என்று சிறப்பாகவும், பெருமிதத்தோடும் சொல்லலாம்.

பாரதிதாசன்

“தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்” என்ற தேன் சுவைசொட்டும் பாடல் வரிகளுக்கு சொந்தக்காரர், ‘பாவேந்தர் பாரதிதாசன்’ அவர்கள். பெரும் புகழ் படைத்த பாவலரான பாரதிதாசன் அவர்கள், ‘புரட்சிக்கவி’ என்றும், ‘பாவேந்தர்’ என்றும் அழைக்கப்பட்டார். தமிழ் இலக்கியம், தமிழ் இலக்கணம் மற்றும் சைவ சித்தாந்த வேதாந்தங்களை முறையாகக் கற்று, தமிழ் மொழிக்கு அருட்தொண்டாற்றியவர், பாரதிதாசன் அவர்கள். தமிழாசிரியர், கவிஞர், அரசியல்வாதி, திரைக் கதாசிரியர், எழுத்தாளர், கவிஞர், என்று பல்வேறு துறைகளில் தமிழ் மொழியின் இனிமையை மக்களிடம் எடுத்துச் சென்றவர் என்று சொன்னால் அது மிகையாகாது. தனது படைப்புகளுக்காக ‘சாஹித்ய அகாடமி விருது’ பெற்ற பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் தமிழ்மொழியில் இன்றளவும் நிலைத்துநிற்கும் அவரது தலைச்சிறந்த படைப்புகள் பற்றியறிய மேலும் தொடர்ந்து படிக்கவும்.
பிறப்பு: ஏப்ரல் 291891
பிறப்பிடம்: புதுவை
இறப்பு: ஏப்ரல் 21, 1964
பணி: தமிழாசிரியர்கவிஞர்அரசியல்வாதி
நாட்டுரிமை: இந்தியன்

பிறப்பு
பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள், தென்னிந்தியாவில் இருக்கும் புதுவையில், ஏப்ரல் மாதம் 29 ஆம் தேதி, 1891 ஆம் ஆண்டில் கனகசபை முதலியார் மற்றும் இலக்குமி அம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். அவரது தந்தை, அவ்வூரில் பெரிய வணிகராக இருந்தார். பாரதிதாசன் அவர்களின் இயற்பெயர் சுப்புரத்தினம். அவரது தந்தையின் பெயரின் முதல் பாதியை, தன்னுடைய பெயரில் இணைத்து ‘கனகசுப்புரத்தினம்’ என்று அழைக்கப்பட்டார்.
ஆரம்ப வாழ்க்கையும், கல்வியும்
பாரதிதாசன் அவர்கள், தனது இளம் வயதிலிருந்தே தமிழ் மொழி மீது அதீத பற்றுடையவராகத் திகழ்ந்தார். இருப்பினும், புதுவையில் பிரெஞ்சுகாரர்களின் ஆதிக்கம் இருந்ததால், அவர் ஒரு பிரெஞ்சு பள்ளியிலே சேர்ந்தார். அவர் தனது தொடக்கக் கல்வியை, ஆசிரியர் திருப்புளிசாமி அய்யாவிடம் கற்றார். அவர் புகழ்பெற்ற அறிஞர்களின் மேற்பார்வையில் தமிழ் இலக்கியம், தமிழ் இலக்கணம் மற்றும் சைவ சித்தாந்த வேதாந்தங்களை முறையாகக் கற்றார். பின்னர், தமிழ் பயிலும் பள்ளியில் சேர அவருக்கு வாய்ப்பு கிடைத்ததால், அங்கு சேர்ந்து அவருக்கு விருப்பமானத் தமிழ் மொழியில் பாடங்களைக் கற்றார். சிறு வயதிலேயே சுவைமிக்க அழகானப் பாடல்களை, எழுதும் திறனும் பெற்றிருந்தார். பள்ளிப்படிப்பை நன்கு கற்றுத் தேர்ந்த அவர், தனது பதினாறாவது வயதில், புதுவையில் உள்ள கல்வே கல்லூரியில் சேர்ந்து, தமிழ் மொழியின் மீது அவர் வைத்திருந்த பற்றினையும், அவரது தமிழ்ப் புலமையை விரிவுப்படுத்தினார். தமிழறிவு நிறைந்தவராகவும், அவரது விடா முயற்சியாலும், தேர்வில் முழு கவனம் செலுத்தியதால், மூன்றாண்டுகள் பயிலக்கூடிய இளங்கலைப் பட்டத்தை, இரண்டு ஆண்டுகளிலேயே முடித்து கல்லூரியிலேயே முதலாவதாகத் தேர்ச்சிப் பெற்றார். மிகச்சிறிய வயதிலேயே இத்தகைய தமிழ் புலமை அவரிடம் இருந்ததால், கல்லூரிப் படிப்பு முடிந்தவுடனே அவர், 1919ல் காரைக்காலைச் சேர்ந்த அரசினர் கல்லூரித் தமிழாசிரியாராகப் பதவியேற்றார்.
 இல்லற வாழ்க்கை
பாரதிதாசன் அவர்கள், தமிழாசிரியாராகப் பதவியேற்ற அடுத்த ஆண்டிலே அதாவது 1920ஆம் ஆண்டில் பழநி அம்மையார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர்கள் இருவருக்கும் நவம்பர் மாதம் 3 ஆம் தேதி, 1928ஆம் ஆண்டில் மன்னர்மன்னன் என்ற மகன் பிறந்தான். அதன் பிறகு, சரஸ்வதி, வசந்தா மற்றும் ரமணி என்ற மகள்களும் பிறந்தனர்.
பாரதியார் மீது பற்று      
தமிழ்மொழி மீது பற்றுக் கொண்டவராக இருந்த பாரதிதாசன் அவர்கள், அவரது மானசீக குருவாக சுப்ரமணிய பாரதியாரைக் கருதினார். அவரது பாடலைத் தனது நண்பனின் திருமண நிகழ்வின் போது பாடிய அவர், பாரதியாரை நேரில் சந்திக்கவும் செய்தார். பாரதியிடமிருந்து பாராட்டுக்கள் பெற்றதோடு மட்டுமல்லாமல், அவரது நட்பும் கிடைத்தது அவருக்கு. அன்று முதல், அவர் தனது இயற்பெயரான கனகசுப்புரத்தினம் என்பதை ‘பாரதிதாசன்’ என்று மாற்றிக் கொண்டார்.
தொழில் வாழ்க்கை
பாரதியாரிடம் நட்பு கொண்ட அன்று முதல், பாரதிதாசன் என்ற பெயரிலே அவர் தனது படைப்புகளை வெளியிட்டார். அச்சமயத்தில், சுதந்திரப் போராட்ட சூழல் நிலவியதாலும், அவர் திராவிட இயக்கத்தின் தீவிர தொண்டன் என்பதாலும், தந்தை பெரியார் மற்றும் பல அரசியல் தலைவர்களுடன் இணைந்து பல போராட்டங்களில் ஈடுபட்டு பலமுறை சிறைக்குச் சென்றார். அவரது இலக்கிய நடையைக் கண்டு வியந்த அன்றைய திரைத் தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் அவருக்கு வாய்ப்புகள் வழங்கியதால், அவர் திரைப்படங்களுக்கும் கதை-வசனம் எழுதியுள்ளார். பெருந்தலைவர்களான அண்ணாதுரை, மு. கருணாநிதி, மற்றும் எம்.ஜி. ராமச்சந்திரன் போன்றோர் அவருடைய படைப்புகளுக்காக அவரை ஊக்குவித்ததாலும், அவர் 1954ஆம் ஆண்டில் புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஐந்து ஆண்டுகள் செம்மையாக செயல்புரிந்த அவர், 1960ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் தோல்வியைத் தழுவினார்.
அவரது படைப்புகள்
எண்ணற்ற படைப்புகளை அவர் தமிழ்மொழிக்கு வழங்கி இருந்தாலும், சாதி மறுப்பு, கடவுள் எதிர்ப்பு போன்ற மூடநம்பிக்கைகளை மக்களின் மனதிலிருந்து அழிக்கும் விதமாகப் பல்வேறு படைப்புகளை வெளியிட்டார். அவரது மிகச்சிறந்த படைப்புகளில் சில:
‘பாண்டியன் பரிசு’, ‘எதிர்பாராத முத்தம்’, ‘குறிஞ்சித்திட்டு’, ‘குடும்ப விளக்கு’, ‘இருண்ட வீடு’, ‘அழகின் சிரிப்பு’, ‘தமிழ் இயக்கம்’, ‘இசையமுது’, ‘குயில்’, ‘தமிழச்சியின் கத்தி’, ‘பாண்டியன் பரிசு’, ‘பாரதிதாசன் ஆத்திசூடி’, ‘பெண்கள் விடுதலை’, ‘பிசிராந்தையார்’, ‘மயிலம் ஸ்ரீ சுப்பிரமணியர் துதியமுது’, ‘முல்லைக் காடு’, ‘கலை மன்றம்’, ‘விடுதலை வேட்கை’, மற்றும் பல.
விருதுகள் மற்றும் அங்கீகாரங்கள்
பாரதிதாசன் அவர்களுக்கு பெரியார், “புரட்சி கவிஞர்” என்ற பட்டமும், அறிஞர் அண்ணா, ‘புரட்சிக்கவி’ என்ற பட்டமும் வழங்கினர். தமிழ்நாடு மாநில அரசாங்கம், அவரது நினைவாக ஆண்டுதோறும் ஒரு தமிழ் கவிஞருக்கு ‘பாரதிதாசன் விருதினை’ வழங்கி வருகிறது மற்றும் ‘பாரதிதாசன் பல்கலைக்கழகம்’ என்ற பெயரில் ஒரு மாநில பல்கலைக்கழகம் திருச்சிராப்பள்ளியில் ​​நிறுவப்பட்டது.
1946 – அவரது “அமைதி-ஊமை” என்ற நாடகத்திற்காக அவர் ‘தங்கக் கிளி பரிசு’ வென்றார்.
1970 – அவரது மரணத்திற்குப் பின், அவரது ‘பிசிராந்தையார்’ நாடகத்திற்காக அவருக்கு ‘சாஹித்ய அகாடமி விருது’ வழங்கப்பட்டது
2001 – அக்டோபர் மாதம் 9ஆம் தேதி, சென்னை தபால் துறை மூலமாக ஒரு நினைவு அஞ்சல்தலை அவரது பெயரில் வெளியிடப்பட்டது.
இறப்பு
எழுத்தாளர், திரைப்படக் கதாசிரியர், கவிஞர், அரசியல்வாதி என்று பன்முகம் கொண்ட பாரதிதாசன் அவர்கள், ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி, 1964 ஆம் ஆண்டில் இயற்கை எய்தினார்.
காலவரிசை
1891: புதுவையில், ஏப்ரல் மாதம் 29 ஆம் தேதி, 1891 ஆம் ஆண்டில் கனகசபை முதலியார் மற்றும் இலக்குமி அம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார்.
1919: காரைக்காலைச் சேர்ந்த அரசினர் கல்லூரித் தமிழாசிரியாராகப் பதவியேற்றார்.
1920: பழநி அம்மையார் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
1954: புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1960: சட்டமன்ற தேர்தலில் தோல்வியைத் தழுவினார்.
1964: ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி, 1964 ஆம் ஆண்டில் இயற்கை எய்தினார்.
1970: அவரது மரணத்திற்குப் பின், அவரது ‘பிசிராந்தையார்’ நாடகத்திற்காக அவருக்கு ‘சாஹித்ய அகாடமி விருது’ வழங்கப்பட்டது.

Wednesday, March 13, 2019

தமிழ் அறிஞர்கள் அறிவோம்: தேவநேயப் பாவாணர்

தனித்தமிழ் இயக்கத்தின் வேர்களில் ஒருவராகவும், மொழிஞாயிறு என்னும் பட்டத்திற்குரியவராகவும், எவருக்கும் தலைவணங்காத தனித் தமிழ் அரிமா என்னும் பட்டத்திற்கு சொந்தகாரார்தான் தேவநோயப் பாவாணர்.
நெல்லை மாவட்டம் சங்கரநயினார் கோயிலை (சங்கரன்கோவில்) அடுத்து பெரும்புதூரில் 07.02.1902-ல் ஞானமுத்து, பரிபூரணம் தம்பத்தியினருக்கு பாவாணர் நான்காம் மகனாகவும் கடைசிப் பிள்ளையாகவும் பிறந்தார். பெற்றோர் இட்டபெயர் "தேவநேசன்". 1906-ம் ஆண்டிலே பாவணரின் தந்தையாரும் அன்னையாரும் அடுத்தடுத்து இயற்கை எய்தினர்.
இதையடுத்து தேவநேசன் சிறுபிள்ளையாதலால், தக்கார் ஒருவர் பொறுப்பில் வளர வேண்டிய நிலை ஏற்பட்டது. அச்சமயம் அவருடய இரண்டாவது அக்காள் திருவாட்டி பாக்கியத்தாய் அம்மையார் தேவநேசனை வளர்க்கும் பொறுப்பைக் கனிவுடன் ஏற்றுக் கொண்டார்.
படிப்பு:
திருவாட்டி பாக்கியத்தாய் அம்மையார் உதவியுடன் வட ஆற்காடு மாவட்டம் ஆம்பூரில் இருந்த கிருத்துவ நடுநிலைப்பள்ளியில் பயின்றார்.
பிறகு, மேற்கல்வி பயில விரும்பியதாலும், அதற்கு ஆம்பூரில் வாய்ப்பில்லாத காரணத்தால் பாவாணர் தாம் பிறந்த மண்ணாகிய நெல்லை மாவட்டத்திலுள்ள பாளையங்கோட்டைக்குச் சென்றார். அப்போது இராமநாதபுரம் மாவட்டம் சோழபுரத்தை அடுத்த சியோன் மலை என்னும் முறம்பில் வசித்து வந்த யங் துறை என்பவரின் உதவியோடு பாளையங்கோட்டையில் உள்ள கிறித்துவ ஊழியக் கழக (C.M.S.) உயர்நிலைப் பள்ளியிற் சேர்ந்தார். பள்ளியிறுதித் தேர்வு (S.S.L.C.) வரை அங்குப் பயின்று சிறப்பாகத் தேர்ச்சி பெற்றார்.
அக்காலத்தில் தேவநேசன் 5-ஆம் படிவத்திலேயே (V Form) தட்டச்சு, கணக்கு வைப்பு ஆகிய பாடங்களையும், 6-ஆம் படிவத்தில் (VI Form) தமிழ், வரலாறு ஆகிய பாடப் பகுதிகளையும் சிறப்புப் பாடங்களாக எடுத்துப் படித்தார்.
அந்நாட்களில் பாவாணர் ஆங்கிலப் பற்றாளராகவும், ஆங்கிலத்திற் சிறந்த பேச்சாளராகவும் விளங்கியிருக்கிறார். பள்ளியிற் பயிலுங்காலத்தில் அவரை எல்லோரும் ‘சான்சன்’ (Samuel Johnson) என்றே அழைப்பர்களாம்.
பாவாணர் தமிழில் எந்த அளவிற்குக் கரை கண்டாரோ, அந்த அளவிற்கு ஆங்கிலத்திலும் சிறந்து விளங்கினார்.
அவர் ஆங்கிலத்தில் பேசும்போதும், எழுதும்போதும் பொதுவான சொல்லைப் பயன்படுத்தாது அதற்குரிய சிறப்பான சொல்லையே (appropriate word) பயன்படுத்துவது அவருக்கே உரிய தனிச்சிறப்பாகும்.
மிகப் பெரிய மொழியாராய்ச்சியாளரான பாவணர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, வடமொழி (சமற்கிருதம்) முதலிய இந்திய மொழிகளுடன் ஆங்கிலம், பிரெஞ்சு, இலத்தீனம், கிரேக்கம், ஆங்கிலோ சாக்சன் முதலிய அயல்நாட்டு மொழிகளும் சேர்த்து ஏறத்தாழ பதினேழு மொழிகளின் இலக்கணங்களை முறையாகக் கற்றறிந்து, ஆரியப் புல்லரும் வையாபுரிக் கூட்டமும் அஞ்சும் வகையில், உலக மொழிகளுக்கெல்லாம் தமிழே மூலம் என்ற உண்மையைத் தக்கச் சான்றுகளுடன் உலகிற்கு எடுத்துக்காட்டியவர். ஒவ்வொரு சொல்லின் ஆணிவேருக்கும் மூலம் தமிழே என்று காட்டிய மொழிப் பேரறிஞர்.
ஆசிரியர் பணி:
1921ம் ஆண்டு ஆசிரியப் பணிக்குச் செல்ல அவர் விரும்பியபோது, அவருக்கு, அவரது ஆசிரியர், பண்டிதர் மாசிலாமணி என்பவர் ஒரு சான்றிதழ் வழங்கினார். அதில் பாவாணரின் பெயரை, "தேவநேசக் கவிவாணன்" என்று குறிப்பிட்டார். பின் அப்பெயரையே தம் பெயராகக் கொண்டார் பாவாணர்.
தனது 17 ஆம் வயதில் உயர்நிலைக் கல்வி பயின்றவுடன் தான் பயின்ற சீயோன் மலை உயர்நிலைப்பள்ளியிலேயே ஆறாம் வகுப்பு ஆசிரியராகவும் பணியாற்றினார்.
1921-ஆம் ஆண்டு மீண்டும் வட ஆற்க்காடு மாவட்டம் ஆம்பூர் சென்றார். அங்கு அவர் முன்பு கல்வி பயின்ற பள்ளியிலேயே தமிழ் கற்பிக்கும் பணியில் அமர்த்தப்பட்டார். அப்பள்ளி 1922-ஆம் ஆண்டு உயர்நிலைப் பள்ளியாக உயர்த்தப்படவே, திரு. தேவநேசனும் அங்கு உதவித் தமிழாசிரியராகப் பதவி வுயர்வு பெற்றார்.
அவ்வாண்டிலேயே தாம் இளமையில் பயின்ற ஆம்பூர் நடுநிலைப்பள்ளியில் உதவித் தமிழாசிரியராகப் பணியில் சேர்ந்தார்.
ஆம்பூர், தஞ்சை மாவட்டத்திலுள்ள மன்னார்குடியில், சென்னை திருவல்லிக்கேணி, தாம்பரம் ஆகிய இடங்களில் வித்துவான் பட்டம் பெற்றபின் உயர்நிலைப்பள்ளி ஆசிரியராகவும் பணியாற்றினார்.
திருச்சி பிஷப் ஹீபர் உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றினார். அப்போது 1940 -இல் மொழியாராய்ச்சி நூலான ‘ஒப்பியன் மொழி நூல்’ என்னும் நூலை வெளியிட்டார்.
சேலம் நகராட்சிக் கல்லூரியில் தமிழ்துறைத் தலைவராகவும் பணியாற்றினார்.
பாவாணர் ஓரிடத்தில் நிலைத்து பணி செய்யவில்லை.
-1924ம் ஆண்டு மதுரைத் தமிழ்ச்சங்கப் பண்டிதத் தேர்வு எழுதி வென்றார். அத்தேர்வில் அம்முறை வேறு எவரும் வெற்றி பெற்றிலர் என்பது குறிப்பிடத்தக்கது. "நேசன்" என்பதும் "கவி" என்பதும் வடசொற்கள் என்பதை அறிந்துகொண்ட பின்னர், தம் பெயரைத் "தேவநேயப் பாவாணர்" என அமைத்துக்கொண்டார்.
- 1926ம் ஆண்டு திருநெல்வேலி தென்னிந்திய தமிழ்ச் சங்கம் நடத்திய தனித் தமிழ்ப் புலவர் தேர்வெழுதி அதில் வெற்றி பெற்றார். இதிலும் அவர் ஒருவரே வெற்றி பெற்றார். பின்னர் பி.ஓ.எல் தேர்வும் சென்னைப் பல்கலைக் கழகத்தில் எழுதி வென்றார். எம்.ஓ.எல். பட்டம் பெறுவதற்கு "திராவிட மரபு தோன்றிய இடம் குமரி நாடே" என்னும் பொருள் குறித்து இடுநூல் எழுதி, சென்னை பல்கலைக்கழகத்தில் அளித்தார். ஆனால் பாவாணரின் இந்நூலை பல்கலைக்கழகம் ஏற்கவில்லை. அதற்கு காரணம் ஆய்வுக் குழுவில் இடம்பெற்றிருந்தோரின் காழ்ப்புணர்ச்சியே ஆகும்.
பல்கலைக்கழகப் பணி:
பல்வேறு போராட்டங்களுக்கும், சிந்தனையின் எண்ண ஒட்டங்களின் முடிவாக 12.7.1956 அன்று அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் திராவிட ஆராய்ச்சித் துறையில் ஆய்வராளராகவும் பணியை தொடங்கினார்.
பாவாணர் அண்ணாமலை நகர் சென்று ஐந்தாண்டு காலம் முடிந்தது. ஆறாம் கல்வியாண்டுத் தொடக்கத்தில் துணைவேந்தர் மாறினார். புதிதாய் வந்தவர்க்குத் தமிழ்ப் பற்று சிறிதுமில்லை. பேராசிரியன்மார் பெருமையுணரும் திறமுமில்லை. அதை நன்கு பயன்படுத்திக் கொண்ட தமிழ்ப் பகைவரும் தந்நலக்காரரும் கூடித் தமிழுக்குக் கேடு செய்துவிட்டனர். திடுமென்று பாவாணர்க்கு வேலை நீங்கியதாக ஓலை வந்தது. இலக்கணப் புலமையில்லாத முனைவர் சேதுப்பிள்ளையின் திட்டமே இறுதியில் மேற்கொண்டது.
"செத்துங் கொடுத்தான் சீதக்காதி செத்துங் கெடுத்தார் சேதுப் புலவர்" என்று மனம் வெதும்பினார் பாவாணர்.
"ஆண்டி எப்போது சாவான்; மடம் எப்போது ஒழியும்" என்று பாவாணர் பதவிக்கும் உறையுட்கும் நீண்ட நாள் காத்திருந்தனர் பலர். முறைப்படி மும்மாத அறிவிப்பு கொடுத்தல் வேண்டும். அதையும் பல்கலைக் கழகத்தார் பாவாணர்க்குக் கொடுத்திலர். அப்போது, எனக்கு வறுமையும் உண்டு; மனைவி மக்களும் உண்டு; அவற்றோடு மானமும் உண்டு என்று கூறிய பாவாணர் 1961-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 23-ஆம் தேதி அண்ணாமலை நகரை விட்டு வெளியேறினார். அவரோடு தமிழும் வெளியேறியது.
அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திற் பாவாணர் பணி நலம் பாராட்டிய பாவேந்தர் பாவாணர்க்குப் பதிகம் பாடினார்.
"நாவலந் தீவுக்கு நந்தமிழே தாயென்று
கூவும் அதுவுமோர் குற்றமா? - பாவிகளே
தேவநே யர்க்குச் செயுந்தீமை செந்தமிழர்
யாவர்க்கும் செய்வதே யாம்"
என்று ‘குயில்’ இதழில் எழுதினார்.
- வறுமை வாட்டியபோதும் வாழ்நாளெல்லாம் சொல்லாய்வுக்காக நூல்களை வாங்கிக் கொண்டிருந்தார்.
- 1974ம் ஆண்டு பாவாணர் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலி இயக்குநராக இருந்தபோது, அவருக்கு மராட்டிய மொழி அகரமுதலி ஒன்று தேவையாய் இருந்தது. அப்போது மூர் அங்காடியில் இராசவேல் என்ற பழைய புத்தக வணிகரிடம் அந்நூல் இருந்தது. அந்த அகராதியைப் பாவாணர் அரசு பணத்தில் வாங்காது தமது பணத்திலேயே வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
- 1974 ஆம் ஆண்டு தமிழக அரசு தொடங்கிய செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகர முதலி இயக்கத்தின் இயக்குநராகவும் பொறுப்பேற்றார்.
புலமை:
01. சென்னைப் பல்கலைக்கழக வித்துவான்
02. மதுரைத் தமிழ்ச்சங்கப் பண்டிதர்
03. திருநெல்வேலித் தென்னிந்திய தமிழ்ச்சங்கப் புலவர் என்னும் மூன்று பட்டங்களைப் பெற்றார்.
பாவணர் மிகச்சிறந்த தமிழறிஞரும், சொல்லாராய்ச்சி வல்லுநருமாவார். இவர் 40-க்கும் மேற்பட்ட மொழிகளின் சொல்லியல்புகளைக் கற்று மிக அரிய சிறப்புடன் சொல்லாராய்ச்சிகள் செய்துள்ளார். மறைமலை அடிகளார் வழியில் நின்று தனித்தமிழ் இயக்கத்திற்கு ஆழ்வேராகவும் அடிமரமாகவும் இருந்து சிறப்பாக உழைத்தார். இவருடைய ஒப்பரிய தமிழறிவும் பன்மொழியியல் அறிவையும் கருதி, மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் என்று அழைக்கப்பட்டார்.
தமிழ் உலக மொழிகளில் மூத்ததும் மிகத்தொன்மையான காலத்திலேயே செம்மையான மொழியாக வடிவம் பெற்றது எனவும்; திராவிடத்திற்குத் தாயாகவும் ஆரியத்திற்கு மூலமாகவும் விளங்கிய மொழியென வாதிட்டவர். கிரேக்கம், இலத்தீன், சமற்கிருதம் உள்ளிட்டவைகளுக்குத் தன் சொற்கள் பலவற்றை அளித்தது என்று நிறுவியவர் பாவாணர் ஆவார். தமிழின் வேர்ச்சொல் வளத்தையும் செழுமையையும் சுட்டிக்காட்டி, அதன் வளர்ச்சிக்கான வழியையும் அவரின் நூல்களின் வழி உலகிற்கு எடுத்து இயம்பினார்.
பாவணரின் கொள்கை:
திராவிடத்தின் தாய், ஆரியத்தின் (வடமொழி) அடிப்படை தமிழ் என சான்றுகளைல் நிறுவியவர் கிரேக்கம், இலத்தீன், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் சொற்கள் சிலவற்றை எடுத்துக்கைட்டி விளக்கியவர்.
- உலக முதன் மொழி தமிழ்
- உலக முதல் மாந்தன் தமிழன்
- அவன் பிறந்தகம் குமரிக்கண்டம்
தமிழ் திராவிட மொழிகளுக்குத் தாய் வடமொழிக்கு மூலம் என்பது அவர்தம் உண்மையான அடிப்படைக் கொள்கைகளில் சிலவாகும்.
விருதுகளும் சிறப்பு பெயர்களும்:
மதுரை தமிழ்க் காப்புக் கழகம் - 12.1.64 அன்று 'தமிழ்ப்பெருங்காவலர்' விருது வழங்கியது.
குன்றக்குடி அடிகளார் பாரிவிழாவில் செந்தமிழ் ஞாயிறு விருது வழங்கினார்.
தமிழக அரசு - செந்தமிழ்ச் செல்வர் விருது வழங்கியது.
எழுதிய நூல்கள்:
01. இசைக் கலம்பகம்
02. இயற்றமிழ் இலக்கணம்
03. இந்தியால் தமிழ் எவ்வாறு கெடும்
04. ஒப்பியன் மொழி நூல்
05. தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்
06. தமிழர் திருமணம்
07. திராவிடத் தாய்
08. பழந்தமிழாராய்ச்சி
09. இசைத்தமிம் சரித்திரம் ஆகிய நூல்கள் குறிப்பிடத்தக்கவை.
இறுதி நாட்கள்:
தன்னலம் சிறிதுமின்றி, குலமத வேறுபாடுகள் இவற்றையெல்லாம் கடந்து, தமிழுக்காகவும் தமிழினத்திற்காகவும் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு வாழ்ந்த ‘மொழிஞாயிறு’ என்று அழைக்கப்படும் ஞா. தேவநேயப் பாவாணர்.
மதுரையில் நடைபெற்ற ஐந்தாம் உலகத்தமிழ் மாநாட்டில் பங்கேற்று மாந்தன் தோற்றணும் தமிழ் மரபும் என்னும் பொருளில் 75 நிமிடங்கள் உரையாற்றினார். அன்று (05.01.1981) இரவே உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் நொயிலிருந்து மீளாமலேயே 16.01.1981 பின்னிரவு (அதிகாலை) ஒரு மணிக்கு இயற்கை எய்தினார்.

அதென்ன தமிழ் பிராமி எழுத்து ? - ஒரு வரலாற்று மோசடி..!!!

28-10-2012 ஆம் நாளிட்ட ஆங்கில ஏடான இந்து நாளிதழில் வந்திருந்த ஒரு கட்டுரை. தலைப்பு : “POTSHRED WITH TAMIL-BRAHMI SCRIPT FOUND IN OMAN”. அதாவது ஓமன் நாட்டில் கண்டெடுக்கப்பட்ட ஓட்டுச்சில்லில் தமிழ்-பிராமி எழுத்துக்கள் என்பது அதன் பொருள்.

இதைப்பற்றி இந்துவின் இணையதள இதழிலும் வந்தது. இந்தச் செய்தி உண்மையிலேயே தமிழின் தொன்மையையும் தமிழர்கள் கடல் கடந்து மிகப்பழங்காலத்திலேயே பல நாடுகளில் தங்கள் குடியேற்றத்தைச் செய்து கால் பதித்து கலாச்சாரத்தைப் பதித்திருக்கிறார்கள் என்பது ஒவ்வொரு தமிழனும் நெஞ்சு நிமிர்த்தி பெருமை கொள்ளத்தக்கது.

மேற்கூறிய செய்திகளில் தெரிய வருவது நம்மை அதிசயத்தில் உறைய வைக்கிறது. இப்படிப்பட்ட தமிழ் எழுத்துக்கள் தாங்கிய ஓட்டுச்சில்லுகள் மத்தியத் தரைக் கடலின் மேற்குப்பகுதியான எகிப்து முதல் கிழக்குப்பகுதியில் தாய்லாந்து, வியட்நாம் போன்ற நாடுகள் வரை பல்வேறு இடங்களில் கிடைக்கின்றன என்றும் இதற்கான செய்திகள் அவ்வப்போது இந்து நளிதழ் உட்பட பல்வேறு மேலை நாட்டு செய்தித்தாள்களிலும் வெளிவந்திருக்கின்றன.

அடடா! “யாதும் ஊரே யாவரும் கேளிர்!” என்று தமிழன் சும்மா பாட்டாக மட்டும் பாடி வைக்கவில்லை.! ஓட்டிலும் எழுதி பல நாடுகளில் ஒட்டி வாழ்ந்திருக்கிறான் என்பது எவ்வளவு பெருமைபடத்தக்க செய்தி!

இப்போது கண்டுபிடிக்கப்பட்ட ஓட்டுச்சில்லு கோர் ரோரி (KHOR RORI) என்ற ஓமன் நாட்டுப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த ஓட்டுச்சில்லில் “நந்தை கீரன்” என்று எழுதப்பட்டிருக்கிறதாம்! இப்போது நாம் பேசிப்பழகி எழுதி வரும் தமிழ் எழுத்து வடிவில் அல்ல! மிகப் பழங்காலத்தில் தமிழ் எழுதப்பட்ட எழுத்து வடிவில்! அதை வல்லுனர்கள் தமிழ்-பிராமி என்று அழைக்கிறார்கள். தமிழ் என்பது சரி. அதென்ன பிராமி? இதில் ஒரு வரலாற்று மோசடி ஒளிந்து கொண்டிருக்கிறது.

இந்த ஓட்டுச்சில்லில் “நந்தை கீரன்” என்று எழுதப்பட்டிருக்கிறதாம்! இப்போது நாம் பேசிப்பழகி எழுதி வரும் தமிழ் எழுத்து வடிவில் அல்ல! மிகப் பழங்காலத்தில் தமிழ் எழுதப்பட்ட எழுத்து வடிவில்! அதை வல்லுனர்கள் தமிழ்-பிராமி என்று அழைக்கிறார்கள்.

தமிழ் என்பது சரி. அதென்ன பிராமி? இதில் ஒரு வரலாற்று மோசடி ஒளிந்து கொண்டிருக்கிறது.

ஒருவேளை, பிராமி என்பது சமஸ்கிருத எழுத்தா? சமஸ்கிருதம் எப்போதுமே எழுதப்பட்டதே இல்லையே! அதற்குத்தான் எழுத்து வடிவமே கிடையாதே! எல்லாம் வாய்மொழியோடு சரி! அதனால்தானே வடவேதத்திற்குக் கூட எழுதாக்கிளவி என்று கூறினார்கள்.

பழங்காலத்தில் சமஸ்கிருதத்தைப் பேசியவர்கள் அதை ஏன் எழுதவில்லை? சிந்திக்க வேண்டிய விசயம்! உலகிலேயே முதன்முதலில் தான் பேசும் மொழிக்கு எழுத்து வடிவம் கொடுத்தவன் தமிழன்! அதைக் கல்லிலும், ஓட்டிலும், ஓலையிலும் எழுதிப்பார்த்தவன் தமிழன்!

சமஸ்கிருதத்திற்கு எழுத்து வடிவமே கிடையாது. இன்று நாம் சமஸ்கிருதத்தை தேவநாகரி என்றும், கிரந்தம் என்றும் இரண்டு இரவல் வாங்கப்பட்ட எழுத்து வடிவில் எழுதிப்படிக்கிறோம். இது இரவல் வாங்கியது! சமஸ்கிருதத்திற்குச் சொந்தமில்லாதது.

கி.பி.5 ஆம் நூற்றாண்டில் சமஸ்கிருதத்திற்குத் தமிழ்நாட்டில் கிரந்தம் என்ற தமிழ் எழுத்துக்கள் உள்ளடக்கிய எழுத்து வடிவம் தமிழ் சிவாச்சாரியார்களால் பல்லவர் காலத்தில் உருவாக்கப்பட்டது. அதனால் அதற்கு பல்லவ கிரந்தம் என்றே பெயர்.

அதற்குப்பின் பல நூற்றாண்டுகட்குப்பின் இந்தி மொழி உருவாகிய பின் வடநாட்டினர் சமஸ்கிருதத்திற்கு எழுத்து வடிவத்தை இந்தி வடிவில் கொடுத்ததுதான் தேவநாகரி.

அப்படியானால் மிகப் பழங்காலத்தில் சமஸ்கிருதம் உருவான போது ஏன் எழுத்து வடிவம் அதற்கு இல்லை? ஒரு நொண்டிச் சமாதானம் அதற்குச் சொன்னார்கள் – எழுதினால் அதற்கு ஆற்றல் போய்விடுமாம்!

இது இப்படி இருக்க மேற்கண்ட தமிழ் எழுத்துக்கள் கிறித்து பிறப்பதற்கு பல ஆயிரம் ஆண்டுகட்கு முன்பிருந்தே எழுதப்பட்டு வந்திருக்கிறது என்று ஓமன் நாட்டில் கண்டெடுத்த ஓட்டுச் சில்லுகளைப்போல பல சான்றுகள் கிடைத்துக் கொண்டே வருகின்றன. இவ்வாறு முதன் முதலில் பல ஆயிரம் ஆண்டுகட்கு முன்பே தமிழில் எழுதி வந்திருக்க அதற்கு ஏன் பிராமி என்று ஒரு சமஸ்கிருதப் பெயர் கொடுக்கப்பட வேண்டும்?

இவ்வாறு முதன் முதலில் பல ஆயிரம் ஆண்டுகட்கு முன்பே தமிழில் எழுதி வந்திருக்க அதற்கு ஏன் பிராமி என்று ஒரு சமஸ்கிருதப் பெயர் கொடுக்கப்பட வேண்டும்?

(நலன் கருதி இந்த இடத்தில சில வரிகள் நீக்கப்பட்டுள்ளது., இணையத்தில் படித்து தெரிந்துகொள்ளவும்) உண்மையில் பல சமஸ்கிருத புராண நூல்களிலேயே – மொழிகளின் பட்டியல் ஒன்று வருகிறது. அதாவது கி.மு 3-வது நூற்றாண்டிலேயே எழுந்த ‘சமவயங்ககத்தா’ என்ற பிராகிருதத்தில் எழுதப்பட்ட சமண நூல் 18 வகை எழுத்துக்களைக் குறிப்பிடுகிறது.

அவையாவன.
1.பாம்பி
2.யவனானி
3.தோசபுரியா
4.கரோத்தி
5.புக்கரசரியா
6.போகவையா
7.பகாரியா
8.உயமித்ரகரியா
9.அக்கரபுட்டியா
10.தவனானியா
11.கிணிகையா
12.அங்காலிவி
13.கணிதாவிலி
14.காந்தவ்யவிலி
15.ஆடம்சாலிவி
16.மகாசனி
17.தமிழி
18.பொலிம்னி

இங்கே குறிப்பிடப்பட்டுள்ள எழுத்து வடிவப் பட்டியலில் தமிழி இருப்பது காண்க. தமிழ்தானே முதலில் கண்டுபிடிக்கப்பட்ட எழுத்து வடிவம்? அப்படியானால் அதுதானே பட்டியலில் முதலில் இடம் பிடித்திருக்க வேண்டும்? ஏன் அது 17 ஆவதாகக் காட்டப்பட்டிருக்கிறது? காரணம், இப்பட்டியலை வடநாட்டினர் தயாரித்தனர். எனவே அவர்கள் தென்னாட்டுத் தமிழை இறுதியில் வைத்துவிட்டனர்.

சரி, கி.மு 3-ஆம் நூற்றாண்டிலேயே தமிழின் எழுத்து வடிவம் தமிழி என்று கூறப்பட்டிருப்பதைப் பார்த்தோம். தமிழின் எழுத்து வடிவம் தமிழி என்பதுதானே சரியாக இருக்கமுடியும்! அதென்ன பிராமி?

மேற்கண்ட அசோகன் காலமான கி.மு.மூன்றாம் நூற்றாண்டில் கூறப்பட்ட பட்டியலில் எங்காவது பிராமி என்று ஓர் எழுத்து வடிவம் வந்துள்ளதா?

இல்லையே.!
அப்படியானால் தமிழோடு பிராமி என்று ஒட்டு சேர்த்தவன் வேண்டுமென்றே ஓர் உள்நோக்கத்துடன் ஒட்டு சேர்த்திருக்கிறான்! அந்த உள்நோக்கம் தமிழின் தொன்மையைக் குறைக்க வேண்டும் – மாறாக வடமொழிக்கு முதன்மையை ஏற்ற வேண்டும் என்பதுதான். இது தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது..!!

ஆரம்ப காலம் முதல் உள்ள தமிழ் எழுத்துக்களின் வடிவங்கள்!

தமிழனின் அறிவு உலகத்தாரால் ஒப்பிட்டு பார்க்க முடியாத ஒன்றாகும். உலகநாடுகளின் விஞ்ஞான வாளர்ச்சிக்கு முன்பே சங்க கால தமிழன் இது நிலவுலகம் என்றும் மண், ஆகாயம், காற்று, தீ, நீர் என்ற ஐம்பூதங்களால் உண்டானது என்றான். வானத்திலிருந்து காற்றும், காற்றிலிருந்து தீயும், தீயிலிருந்து நீரும், நீரிலிருந்து நிலமும் தோன்றியதை புறநானூற்றுப் பாடலிலும், பரிபாடலிருந்து பாடி தமிழனின் வானிவியல் அறிவை வெளிப்படுத்தி வியக்க வைத்தார்கள். நீரின் தன்மையை அறிந்தார்கள். அதன் ஆழத்தை பொறுத்து நீரின் அழுத்தம் அதிகாமாகும் என்றும், நீரை சுருக்க முடியாது என்றும் ஒளவையார் கூறி பல நூற்றாண்டுகள் பின்பே விஞ்ஞானம் இவ்வுண்மையை கண்டு பிடித்தது.

பழங்கால தமிழரின் அறிவியல் அறிவு அளவிட முடியாது. தமிழன் வேளண்முறையிலும் அறிவுள்ள சிந்தனையை கொண்டிருந்தான். நிலத்தை பல முறை ஆழ உழுவதால் சூரியனிடம் நில சத்தை பெரும், அதனால் உரமின்றி செழிப்படையு ம் என்ற அறிவியல் செய்தி திருக்குறளில் உள்ளது. நிலத்தை மழை நீர் அரிப்பின்றி தடுப்பதில் தனித்திறமை பெற்றவர்கள் தமிழர்களே. கட்டிட கலையிலும், நீர்யியலும் தமிழர் மட்டுமே அறிந்திருந்தனர். நீரைதரை உரிஞ்சாமலும் சமதரையில் அணை கட்டும் திறனும் தமிழர்களுக்கே உரித்தானது. அதற்கு சான்று இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் கட்டிய கல்லணையே ஆகும். எகிப்து நாட்டில் நைல் நதியில்அணைகளை கட்டியதும் தமிழ்நாட்டு நீரியல் கட்டுமான வல்லுநர்களே ஆவர்கள். சிற்பக்கலையிலும் தமிழர்கள் சிறந்தவர்கள். தமிழன் போற்றி வளர்த்த கலைகளில் போரியலும் ஒன்று. படையமைப்பு, போர் உத்தி, போரிடும் முறை இதில் அடங்கியவை ஆகும். தமிழன் தன்வாழ்க்கையின் இருகண்களாக காதலையும், வீரத்தையும் கருதினான்.

தமிழ் மொழி

சங்கம் வைத்து தமிழ் வளர்த்ததால் வாழ்க்கைக்கு இலக்கணம் கூறும் தொல்காப்பியம் பெற்றோம். இயல் இசை, நாடகம் என முப்பிரிவை கொண்டும் தமிழை வளர்த்தோம். இலக்கிறதமிழ், சங்க இலக்கிய போக்கிலிருந்து மாறி சமய மொழியானது. பக்தி இயக்க காலத்தில் சித்தாந்த மொழியாகவும், தத்துவ விளக்க மொழியாகவும் போற்றப்பட்டது. அப்போது உருவாக்கப்பட்ட தேவாரம், சைவ இலக்கியங்கள், வைணவ காசுரங்கள் இசைப் பாடல்களாக உருவாக்கப்பட்டன. இதனால் இயற்றமிழாக இருந்த தமிழை சமய தமிழாகவும், இசைத் தமிழாகவும் மாற்றின. சங்க காலத்திற்கு பின்னால் செய்யுள் படிப்பது போல் இருந்த உரைநடையை ஐரோப்பாவில் இருந்து சமய தொண்டாற்றி வந்த தமிழறிந்த வீரமாமுனிவர் என்ற பெஸ்கி பாதிரியார் உரை நடையில் முதன் முதலாக நூல் எழுதி இன்றைய உரைநடை வளர்ச்சிக்கு வழிகாட்டினார். 

தமிழ் வளர்ச்சிகும், இலக்கிய செழுமைக்கும் வழி வகுத்தார். சித்தமருத்துவம் எனும் மருத்துவ முறை தமிழில்தான் தோன்றியது. 1830-ஆம் ஆண்டிற்கு பிறகு தாய்மொழியாகிய தமிழ் மூலம் சிறுவர்களுக்கு பாடம் புகட்டு தமிழ் பயிற்சி மொழித்திட்டம் தொடக்கப்பட்டது. முதல் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை தமிழே பயிற்சி மொழியாக்கப்பட்டது. 1930/ஆம் ஆண்டுக்குப் பின்னர் நடுநிலைப்பள்ளி வரை இருந்த தமிழ் பயிற்சி மொழி திட்டம் பள்ளி இறுதி வரை நீடிக்க வழி வகுக்கப்பட்டது. 1931-ல் தமிழ் மேகஸின் என்ற முதல் தமிழ் மாத இதழ் வெளிவர தொடங்கியது. நம் உண்ணும் உணவை நமது குடல் நமது வயிற்றால் செறிப்பது போல நமது அறிவை நம் தாய் மொழியில்தான் பெற வேண்டும் என்ற தாகூரின் உணர்வு தமிழ் மட்டும் காலத்தை வென்ற மொழியாக நிலைத்து நிற்கும் திறன் படைத்துள்ளது. சங்க காலம் முதல் ஆங்கிலேயர் ஆட்சிகாலம் வரை தன் வளர்ச்சி பாதையில் பல மாற்றங்களை தமிழ் ஏற்றுக் கொண்டது. காலத்திற்கு ஏற்ப வளைற்து, நெளிந்து கொடுக்கும் மொழியே நிலைத்து நிற்க முடியும் என்பதற்கு தமிழ் மொழியே சான்று.

தமிழ் எழுத்து வடிவங்கள்

இந்தியா முழுவதும் கிடைக்கும் கல்வெட்டு எழுத்துக்களிலேளே காலத்தால் மிகவும் பழமையானதும் முன்னேடியானதுமாக தமிழகத்தின் குகைகளில் காணப்படும் எழுத்துக்களே ஆகும். கி.மு. 300 க்கும் முன்னதாக சுமார் 2300 ஆண்டுகளுக்கு முன்னதாக எழுதப்பட்டது. தமிழ் எழுத்துக்களின் வரி வடிவில் மிக்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி ஒழுங்கான வடிவமைப்பு கி.பி. 6-ஆம் நுற்றாண்டில் பலலவர்காலத்தில் வடிவமைக்கப்பட்டது. தமிழகம் சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் நாடுகளில் தமிழே பயன்படுத்தப்பட்டது. இவர்களின் காலங்களில் அவரவர்கேற்ப எழுத்துக்களை வடிவமைத்துக் கொண்டார்கள். சேரர்களால் உருவாக்கப்பட்டது வட்டெழுத்து வடிவம். பாண்யர்கள் ஆட்சி காலத்தில் கோல் எழுத்து முறை கடைப்பிடிக்கப்பட்டது. சோழ பேரரசு காலங்களில் வட்டடெழுத்தும் கோலெழுத்தும் கலந்த தமிழ் எழுத்துக்களை பயன்படுத்தினார்கள்.

தமிழ் மொழியின் காலக் கணக்கு

கி.மு. 20,000 க்கு முன் பேச்சு மொழி.கி.மு.20,000-15000 சித்திர எழுத்துக் காலம்.கி.மு.15000-12000 எளிய சித்திர எழுத்துக்கள்.கி.மு.12,000-9000 வரை முதல் வகை அசை எழுத்துக்கள்.

சிந்து வெளி நாகரிக வகை எழுத்துக்கள் கி.மு.9000-4000வரை நடைமுறையில் இருந்தன.அதன்பின் வட்டெழுத்துக்கள் கி.மு.4000 உருவாகின.

இரண்டாம் வகை வட்டெழுத்துக்கள் கி.மு .2000-1000 நடைமுறையில் இருந்தன.கி.மு 1000ம் முதல் கி.மு.300 வரை உள்ள கால கட்டங்களில் பிற்காலத் தமிழ் பிரம்மி எழுத்துக்கள் உருவானது.

நகரித் தமிழ் எழுத்துக்கள் கி.பி.300 காலங்களில் பயன் பாட்டுக்கு வந்தது.தற்போது நாம் பயன் படுத்தும் தமிழ் எழுத்துக்கள் கி.பி. 900 க்கு மேல் படிப்படியாக மாற்றம் பெற்று வளர்ந்தது.

கி.பி.எட்டாம் நூற்றாண்டுகளில் ஆங்கிலம் போன்ற ஐரோப்பிய மொழிகள் எதுவும் இல்லை.கிரேக்க மொழியில் தான் பைபிள் போன்றவற்றை ஐரோப்பியர்கள் எழுதி பயன்படுத்தினார்கள்.

அந்த கால கட்டத்தில் தென் இந்திய மொழிகளும் இல்லை. வடஇந்திய மொழிகளான மராத்தி,குஜராத்தி,உருது, வங்காளி மொழிகளும் கூடஇல்லை.

கி.மு ஐந்தாம் நூற்றாண்டுக்கு முன்பு இருந்த மொழிகள் சமஸ்கிருதம்,இலத்தின் ,சீனம்,ஹிப்ரூ,கிரேக்கம்,ஆகியவை மட்டுமே. அவையும் தமிழ் மொழியில் இருந்து திரிந்தவைதான்.

தமிழில் ஏன் பெயர் வைக்க வேண்டும்?

மொழி தான் ஒருவருடைய அடையாளமாகும். தத்தம் மொழியில் பெயரை வைத்துக்கொள்வது என்பது அடையாளப்படுத்துவதற்கு உதவும்.
இன்னொரு மொழியில் பெயர் வைப்பதில் என்ன தவறு?
இன்னொரு மொழியில் பெயர் வைப்பது என்பது, ‘ஒருவர் தம்முடைய மொழியை விட இன்னொரு மொழியை உயர்வாகக் கருதும்போது’ மட்டுமே நிகழும்.
இன்னொரு மொழி நம்முடைய மொழியை விட உயர்வானது என்று கருதக் கூடாதா?
இன்னொரு மொழியைச் சிறப்பாகக் கருதலாமே தவிர நம்முடைய மொழியை விட உயர்வானது எனக் கருதுவது கூடாது. ஏன்? ஒவ்வொரு மொழிக்கும் சில தனிச் சிறப்புகள் உள்ளன. எ.கா. தமிழில் ல,ள,ழ, என்றும் ர,ற என்றும் ன,ண,ந என்றும் அமைந்திருப்பதை உலக மொழிகள் வேறு எவற்றிலும் காண முடியாது. அதே போலப் பிற்கால ஒலிகளாகிய ‘எப்’ (‘F’) போன்ற ஒலியைத் தமிழ் முதலிய செம்மொழிகளில் காண முடியாது. ஆகவே ஒவ்வொரு மொழிக்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு.
நம்முடைய மொழியை விட இன்னொரு மொழியை உயர்வாக எண்ணும் ஒருவர், இயல்பாகவே தம்முடைய மொழியையும் அதன் வழியே தம்முடைய இனத்தையும் தாழ்வாகக் கருதுபவராக அமைந்துவிடுவார். இப்படி உருவாகும் தாழ்வு மனப்பான்மை அவருடைய வளர்ச்சிக்கு இடையூறாக அமைந்துவிடும்.
அது சரி, அப்படியானால் உயர்வான மொழி என்று எதைக் கருதலாம்?
அவரவர்க்கு அவரவர் தாய்மொழியே உயர்வானது. நரிக்குறவர் இனத்திற்கு அவருடைய தாய்மொழியான வக்கிரபோலி உயர்வான மொழியே தவிர, தமிழோ ஆங்கிலமோ இல்லை. ஒவ்வொருவரும் தத்தம் தாய்மொழியின் வாயிலாகவே தங்கள் உலகத்தைப் பார்க்கிறார்கள்.
சான்று: நீங்கள் தமிழராகப் பிறந்து தமிழராக வாழ்வதால் தான் ‘ஒருவனுக்கு ஒருத்தி’ என்னும் பண்பாடு உங்களுடையது என்று உணர்கிறீர்கள் இல்லையா? தமிழ்நாட்டிலேயே பிறந்து வளரும் ஓர் ஆங்கிலேயரை எடுத்துக்கொள்ளுங்கள். அவர் ‘ஒருவனுக்கு ஒருத்தி’ என்னும் பண்பாட்டை அறிந்திருப்பாரேயன்றி அது தம்முடையது என்று உணரவோ அதைப் பின்பற்றவோ மாட்டார். அதே நேரம் வெளிநாட்டிலேயே பிறந்து வளரும் ஒரு தமிழர் இப்பண்பாட்டைத் தம்முடையது என்றும் அதன் படி வாழ வேண்டும் என்றும் எண்ணுவார்.
இன்னொரு மொழியில் பெயர் வைப்பதில் என்ன சிக்கல்?
இன்னொரு மொழியில் பெயர் வைக்கும் போது பல நேரங்களில் அப்பெயர்களின் பொருளே தெரியாமல் வைத்து விடுவோம்.
அபர்ணா என்பது பர்ணம் என்பதன் எதிர்மறை. பர்ணம் என்பது இலைதழைகளாலான ஆடையைக் குறிக்கும். எனவே அபர்ணா என்ற பெயர் ஆடையற்றவள் என்ற பொருள் தருதல் காண்க. சியாமளா என்பதன் பொருள் கறுப்பாயி என்பதாகும். கறுப்பாயி எனத் தமிழில் பெயர் வைக்கத் தயங்கும் ஒருவர் இன்னொரு மொழியில் ‘சியாமளா’ என்று பெயர் வைப்பதை விரும்புவது நகைப்புக்குரியது அல்லவா? ‘கனவு’ எனப் பெயர் வைக்கத் தயங்கும் நாம் ‘சுவப்னா’ என்று அதே பொருள் தரும் பெயரை வேறு மொழியில் வைப்பது அடிமை மனப்பான்மையே அன்றி வேறென்ன?
சில நேரங்களில் நம்முடைய குடும்பப் பெரியவர்களே அப்பெயர்களைச் சொல்லத் தடுமாறுவார்கள். நம்முடைய குழந்தைகளின் பெயரை நம் இல்லப் பெரியவர்களே சொல்லத் தடுமாறுவது நன்றாக இருக்குமா?
அதற்காக, ‘ஞான பிரகாசு’ என்னும் பெயரைத் தமிழாக்கி ‘அறிவு வெளிச்சம்’ என்று வைக்கச்சொல்கிறீர்களா?
நீங்கள் ‘ஞான பிரகாசு’ என்று இன்னொரு மொழியில் பெயர் வைப்பதற்குக் காரணமே அப்பெயர் ஒயிலாக இருப்பதாக எண்ணும் சிந்தனைதான்! ‘ஞான பிரகாசு’ என்று உங்களுக்கு ஒயிலாகத் தெரியும் இந்தப் பெயரை ஓர் அமெரிக்கரிடமோ செருமானியரிடமோ சொல்லிப் பாருங்கள். அவர்களுக்கு இந்தப் பெயர் பெருமைப்படும் பெயராகவோ ஒயிலாகவோ தெரியாதது மட்டுமில்லை, வாயில் கூட நுழையாது. உங்களுடைய அதே சிந்தனை ஏன் ஓர் அமெரிக்கருக்கோ செருமானியருக்கோ வரவில்லை? ஏனென்றால் நீங்கள் உங்களுடைய மொழியை விட, ‘ஞானப் பிரகாசு’ என்னும் பெயரைக் கொண்டுள்ள மொழியை உயர்வாகக் கருதும் மனப்பான்மையில் இருக்கிறீர்கள். இது தாழ்வு மனப்பான்மை தானே!
‘ஞான பிரகாசு’ என்னும் பெயரை ‘அறிவொளி’ என்று அழகு தமிழில் வைக்கலாம் அல்லவா?
அதற்காகக் கோப்பெருந்தேவி, பிசிராந்தையார், ஒளவையார் எனப் பழைய பெயர்களையா வைக்கச் சொல்கிறீர்கள்?
உங்களைத் தமிழில் பெயர் வைக்கச் சொன்னோமேயன்றிப் பழந்தமிழ்ப் பெயர்களைத் தாம் வைக்க வேண்டும் என்று சொல்லவில்லை. பழந்தமிழ்ப் பெயர்களை வைப்பது, புத்தாக்கச் சொற்களை வைப்பது, பெரிய பெயரை வைப்பது, சிறிய பெயராக வைப்பது என்பதெல்லாம் உங்களுடைய விருப்பத்தைச் சேர்ந்ததாகும்.
பழந்தமிழ்ப்பெயர்களை விடுங்கள். ‘புலிக்கட்டை’ என்று பெயர் வைப்பீர்களா? சிரிப்பு வருகிறது அல்லவா? அமெரிக்காவைச் சேர்ந்த புகழ் பெற்ற விளையாட்டு வீரர் ஒருவரின் பெயர் தான் அது! அவருடைய பெயர் ‘Tiger Woods’. அதைத் தமிழில் சொன்னால் ‘புலிக்கட்டை’ தானே! பெயர் பழையது, புதியது என்பதெல்லாம் நாம் எப்படிச் சிந்திக்கிறோம் என்பதைப் பொறுத்துத்தான்! எப்படிச் சிந்தித்தாலும் தாய்மொழியில் இருப்பது தான் முறையாகும்.
‘மோகன்’ என்று பெயர் வைக்கிறோம். அப்பெயரைத் தமிழில் ‘கவின்’ என்றோ ‘எழில்’ என்றோ வைக்கலாம் அல்லவா? ‘கண்ணன்’ எனப் பொருள் தரும் ‘கிருட்டினன்’ என்று பெயர் வைப்பதற்குக் ‘கண்ணன்’ என்றே வைக்கலாம் அல்லவா? ‘விசய்’ என்று பெயர் வைப்பதற்கு ‘வெற்றி’ என்று பெயர் வைக்கலாம் அல்லவா? ‘குமார்’ என்பதற்குக் ‘குமரன்’ என்று வைக்கலாம் அல்லவா? ‘உசா’ என்று பெயர் வைப்பதற்குக் ‘கதிர்’ என்று கூப்பிடலாம் அல்லவா!
சரி! என்னுடைய குழந்தைக்குத் தமிழில் பெயர் வைக்க ஆசைதான்! ஆனால் எங்கு தேடுவது?
ஏன் கவலைப்படுகிறீர்கள்? முனைவர் பா. வளன் அரசு(நெல்லை), முனைவர் மு. தெய்வநாயகம்(சென்னை), புலவர் இரா. இளங்குமரன்(திருச்சிராப்பள்ளி), முனைவர் தமிழண்ணல்(மதுரை), முனைவர் ந. அரணமுறுவல்(சென்னை) எனத் தமிழறிஞர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களை அணுகலாம். இன்னும் பல இயக்கங்கள் இருக்கின்றன. பல இணையத் தளங்கள் இருக்கின்றன. http://www.tamilkalanjiyam.comhttp://www.peyar.inhttp://wapedia.mobi/tahttp://thamizppeyarkal.blogspot.comhttp://tamilsaral.com/news%3Fid%3D3857.dohttp://www.sillampum.com/http://pagalavan.in/archives/328 எனப் பல தமிழ்த்தளங்களில் நீங்கள் தமிழ்ப்பெயரைத் தேர்ந்துகொள்ளலாம்.
குழந்தைகளுக்குப் பெயர் வைப்பதில் மட்டும் தானே இதைச் சொல்கிறீர்கள்?
இல்லை. குழந்தைகளுக்குப் பெயர் வைப்பது, வணிக நிறுவனங்களுக்குப் பெயர் வைப்பது, திரைப்படங்களுக்குப் பெயர் வைப்பது என எல்லாவற்றிற்கும் சேர்த்துத் தான் சொல்கிறோம்.
வணிக நிறுவனங்களுக்குமா?
ஆம். வெளி மாநிலத்திற்கு வந்து பிழைக்கும் தெலுங்கரான ‘உம்மிடி பங்காரு’ம் கன்னடரான ‘உடுப்பி’ உணவகத்துக்காரரும் தத்தம் மொழியிலேயே பெயர் வைக்கும்போது நாம் நம்முடைய மாநிலத்தில் இருந்துகொண்டே வணிக நிறுவனங்களுக்கு வேற்று மொழியில் பெயர் வைப்பது சரியா?
வேற்று மாநிலத்திலோ நாட்டிலோ இருக்கும்போது வணிக நிறுவனங்களுக்கு எப்படித் தமிழில் பெயர் வைப்பது?
ஒன்றும் கவலையில்லை. தமிழ்நாட்டின் தலைநகரிலேயே ‘உம்மிடி பங்காரு’ என்று தெலுங்கில் பெயர் வைத்துக் கடை நடத்தவில்லையா? ‘உடுப்பி’ என்ற பெயரில் தமிழ்நாட்டில் உணவகங்கள் இல்லையா? ‘அகர்வால்’ இனிப்பகங்கள் இல்லையா? ‘நாயர்’ கடைகள் இல்லையா?
திரைப்படங்களுக்குமா சொல்கிறீர்கள்? இது கருத்துரிமையில் தலையிடுவது ஆகாதா?
தமிழில் படம் எடுக்கிறார்கள். கதை தமிழர்கள் பற்றிய கதையாக இருக்கிறது. படத்தைத் தமிழகத்தில் தமிழர்களுக்குத் தான் வெளியிடுகிறார்கள். ஆக, எம்மொழியில் படம் இருக்கிறதோ, யாருக்காக எடுக்கப்படுகிறதோ அம்மொழியில் பெயர் வைப்பது தானே பொருத்தமாக இருக்கும். நாம் ஒன்றும் சப்பான் நாட்டிற்குச் சென்று தமிழில் பெயர் வையுங்கள் என்று கேட்கவில்லை.
தமிழில் பெயரை வைப்பதால் நட்டம் ஏற்படும் சூழல் வரும்போது என்ன செய்வது?
அப்படிப்பட்ட சூழல் இதுவரை வந்ததேயில்லை. எத்தனையோ ஆங்கிலப் படங்களைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடுகிறார்கள். அப்படங்களுக்குத் தமிழில் தான் பெயர் வைக்கிறார்கள். ‘300’ என்று ஓர் ஆங்கிலப் படம் வந்தது. அப்படத்திற்கு ‘300 பருத்தி வீரர்கள்’ என்று பெயர் வைத்தார்கள். பெயர் தமிழில் இருந்ததால் அப்படம் ஓடவில்லையா என்ன?
அப்படியானால் தமிழில் பெயர் வைக்க வேண்டுமா? தாய்மொழியில் பெயர் வைக்க வேண்டுமா?
அவரவர் தத்தம் தாய்மொழியிலேயே பெயர் வைக்க வேண்டும். நாம் தமிழர் அல்லவா! எனவே தமிழிலேயே பெயர் வைக்க வேண்டும்.

சுப்ரமணிய பாரதியார்

சுப்ரமணிய பாரதியார் ஒரு தமிழ் கவிஞர். இந்திய சுதந்திர போராட்ட காலத்தில் கனல் தெறிக்கும் விடுதலைப்போர் கவிதைகள் வாயிலாக மக்களின் மனதில் ...